'கள்ளில்' என்ற ஒரு வகை மரங்கள் சூழ்ந்த இடமாக இருந்ததால் இத்தலம் 'திருக்கள்ளில்' என்ற பெயர் பெற்றது. கயிலாயத்தில் இருந்து தென்திசை நோக்கி வந்த அகத்தியர் இத்தலத்திற்கு அருகில் உள்ள திருப்பாலைவனம் தலத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு அவரது கனவில் வந்த சிவபெருமான் இத்தலத்தில் தாம் இருப்பதை அவருக்கு உணர்த்தினார். அதனால் அகத்தியரும் இத்தலம் வந்து சிவபெருமானை தரிசித்து சிவானந்தம் அடைந்தார். அதனால் இத்தலத்து மூலவர் 'சிவானந்தேஸ்வரர்' என்றும், அம்பாள் 'ஆனந்தவல்லியம்மை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மூலவர் 'சிவானந்தேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஆனந்தவல்லியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நாகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி தமது மடியில் அம்பாளை அமர்த்திக் கொண்டு, தமது கரங்களில் ஜெப மாலை, அமுத கலசம், ஏடு ஆகியவை ஏந்தி 'சக்தி தட்சிணாமூர்த்தி'யாகக் காட்சி தருகின்றார். அவருக்கு அருகில் பிருகு முனிவர் வணங்கிய நிலையில் இருக்கின்றார்.
அதேபோல் இக்கோயிலில் உள்ள முருகப் பெருமான் வலது கையில் ஜெப மாலை, இடது கையில் அமுத கலசம் ஆகியவை தாங்கி நின்ற கோலத்தில் 'பிரம்ம முருகன்' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|